கிள்ளான், அக் 9- கல்வி என்பது வாசிப்பு , எழுத்து ஆகிய இரு கூறுகளை உள்ளடக்கியதாகும். மாணவர்களின் அறிவாற்றல் மேம்பாட்டிற்கு இவை முக்கிய பங்காற்றுகின்றன.இதன் பொருட்டு செந்தோசா வட்டார மாணவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சித் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இவ்விரு திறன்களும் ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழக வரையிலான மாணவர்களுக்கு மிக முக்கியம். தங்கள் அறிவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள இவை உறுதுணை புரிகின்றன.
இந்தப் பயிற்சித் திட்டம் தொடக்கப் பள்ளி மாணவர்களின் சிந்தனையாற்றலை மேம்படுத்தி பல்கலைக்கழகத்தில் சவால்களை எதிர்நோக்குவதற்கு இவர்களைத் தயார்படுத்துகிறது என்று இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் நுழையவிருக்கும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முதிர்ச்சிமிக்க சிந்தனை தேவை.அதோடு, கல்விமான்களின் ஆலோசனையும் வழிகாட்டியும் இவர்களுக்கு மிக அவசியம் என்றார்.
இதனைக் கருத்தில் கொண்டே செந்தோசா மக்களின் மேம்பாட்டிற்காக அண்மையில் தாம் அறிவித்த 5 திட்டங்களில் மூன்றாவது திட்டமாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டு திட்டம் திகழ்கிறது என்று அவர் சொன்னார்.
‘பிரேய்ன் ஜிம்’ பட்டறை வாயிலாக மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய கல்வியாளர்கள் மற்றும் தொண்டூழியர்கள் அடங்கிய கல்வி குழுவிற்கு டாக்டர் குணராஜ் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிள்ளான் ஜெயா தேசிய பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், செந்தோசா சட்டமன்ற சிறப்பு அதிகாரியுமான அஸா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.








