சுபாங் ஜெயா, 8 அக்: பூச்சோங் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள 100 குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பால் மாவு மற்றும் பல்வேறு வைட்டமின்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிட்டோ உணவு வங்கியின் மூலம் இந்த திட்டம் குறைந்த வருமானம் கொண்ட (B40) குடும்பங்களைச் சேர்ந்த வளர்ச்சி குன்றிய, எடை குறைவால் பாதிக்கப் படும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என அதன் பிரதிநிதி கூறினார்.
கடந்த ஜூன் மாதம் ஜோம் சியாட் திட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆறு வயதுக்குட்பட்ட 228 குழந்தைகளில் 35 சதவீதம் பேர் இந்த பிரச்சனையை அனுபவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட திட்டம் மேற்கொள்ளப்பட்டது என இயோ பீ யின் கூறினார்.
"அதைத் தொடர்ந்து, சேவை மையம் ஒவ்வொரு மாதமும் சத்தான பால் மாவு, மல்டிவைட்டமின்களை வழங்கும் மற்றும் அக்குழந்தைகளின் வளர்ச்சி பூச்சோங் ஹோமிஸ் பயன்பாட்டில் பதிவு செய்யப்படும்.
"அக்குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து, அவர்கள் ஆரோக்கியமாக வளர்வது உறுதிசெய்வதும், அறிவாற்றல் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்," என்று அவர் நேற்று பூச்சோங் உத்தாமாவில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு கூறினார்.
மலேசிய சுகாதார அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு ஏஜென்சிகளுடன் இத்திட்டத்தின் செயல்திறனை உறுதி செய்வதற்காக, விரிவாக மதிப்பீடு செய்ய ஆலோசனை வழங்கினேன் என பீ யின் தெரிவித்தார்.
"ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை சமாளிக்க உதவ முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
தேசிய சுகாதாரம் ஆய்வின் (NHMS) 2022 அடிப்படையில் மலேசியாவில் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை 2015இல் 17.1 சதவீதத்திலிருந்து கடந்த ஆண்டு 21.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.








