ஷா ஆலம், அக் 6- வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் வருடாந்திர வருமானத்தை 800 கோடி வெள்ளியாக உயர்த்த சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலீடுகள், சொத்துடைமை மற்றும் மின் உற்பத்தி நிலையத் திட்டங்கள் வாயிலாக இந்த வருமான உயர்வை பதிவு செய்ய அக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பி.கே.என்.எஸ். வசமிருக்கும் வர்த்தக தொகுதிகள், மாநாட்டு மையங்கள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவ மையங்கள் வாயிலாகவும் இந்த வருமானம் பெறப்படும் என்று அக்கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மாமுட் அப்பாஸ் கூறினார்.
தற்போது பி.கே..என்.எஸ்.ஸின் வருமானம் ஆண்டுக்கு 200 கோடி வெள்ளியாக உள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் அதனை 800 கோடி வெள்ளியாக உயர்த்தவதற்குரிய தொலைநோக்கு கொள்கையை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.
இந்த வருமானத்தில் கணிசமான பகுதி பூலாவ் இண்டாவில் வரும் 2024ஆம் ஆண்டு மத்தியில் செயல்படவுள்ள மின் உற்பத்தி நிலையம், கட்டிடங்கள், கட்டிட வாடகை, கட்டுபடி விலையிலான வீடுகளின் விற்பனை மற்றும் நாங்கள் முதலீடு செய்யவுள்ள புதிய திட்டங்கள் வாயிலாக பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான பி.கே.என்.எஸ். உயர்நெறி நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்
இந்த தொலைநோக்கு திட்டத்தின் வாயிலாக பி.கே.என்.எஸ். பலம் பொருந்திய வர்த்தக ஸ்தபானமாக உயர்வு பெறவும் அதன் மூலம் மக்களுக்கான உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவவும் இயலும் என்றார் அவர்.








