ஷா ஆலம், செப் 26- மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம்
ஈட்டும் குடும்பத்தினர் டாருள் ஏசான் இலவச குடிநீர்த் திட்டத்தின்
வாயிலாக பயன்பெறுவதை உறுதி செய்வதில் லெம்பா ஜெயா சட்டமன்ற
உறுப்பினர் முனைப்பு காட்டுகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி அறிமுகப்படுத்த
இத்திட்டத்திற்காக லெம்பா ஜெயா தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட
கோட்டாவில் 250,000 இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்று
அல்டிமேட் என அழைக்கப்படும் சைட் அகமது சைட் அப்துல் ரஹ்மான்
கூறினார்.
இந்த திட்டத்தில் இன்னும் இரண்டரை லட்சம் பேரை பதிய முடியும்.
என்னால் இயன்றவரை அதிகமான குடும்பங்கள் இந்த திட்டத்தின்
வாயிலாக பயன் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறேன் என்று அவர்
குறிப்பிட்டார்.
மாநிலத்தில் குறிப்பாக லெம்பா ஜெயா தொகுதியில் மாதம் ஐயாயிரம்
வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த
திட்டத்தில் இடம் பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை
முன்னெடுக்கவுள்ளேன் என்றார் அவர்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி சிலாங்கூர் அரசினால்
அமல்படுத்தப்பட்ட இலவச குடிநீர்த் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட
வடிவமாக இந்த டாருள் ஏசான் இலவச குடிநீர்த் திட்டம் விளங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 100,000 குடும்பங்கள் மாதம் 20 கனமீட்டர் நீரை
இலவசமாகப் பெறும் என்றும் இந்த திட்டத்திற்கு உண்டாகும் 3 கோடி
வெள்ளிச் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.








