ஷா ஆலம், செப் 26: அக்டோபர் 6 முதல் 8 வரை நடைபெறும் சிலாங்கூர் தொழில் முனைவோர் எக்ஸ்போ 2023 (SELBIZ 2023)இல் ரூமா சிலாங்கூர் கூ கண்காட்சி உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும்.
சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) நடத்தும் இந்நிகழ்வில் உணவு விற்பனையாளர்களை ஒன்றிணைத்த ஃபுட்ட்ரக் திருவிழா உட்பட வருகையாளர்களுக்காக ஒரு சிறப்பு காபி ஃபீஸ்டாவோம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் அனைவரும் பிரத்யேகமாக நடத்தப்படும் செல்பிஸ் 2023 இன் அனுபவத்தை பெறும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
"எனவே இனி காத்திருக்க வேண்டாம். அக்டோபர் 6 முதல் 8 வரை செத்தியா ஆலமிலுள்ள செத்தியா நகர மாநாட்டு மையத்திற்கு வாருங்கள். www.selbiz.my என்ற இணைப்பின் மூலம் பார்வையாளராகப் பதிவு செய்யுங்கள்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வீடியோ மூலம் கூறினார்.
மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வு, தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இதில் சிலாங்கூர் தொழில் முனைவோர் கிளினிக், அதிர்ஷ்ட குலுக்கு மற்றும் செல்பிஸ் ரன் 2023 ஆகியவற்றுடன் கூடுதலாக 200 வணிக கண்காட்சிகளும் இடம்பெறும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் ஷா ஆலம் கன்வென்ஷன் சென்டரில் (SACC) நடைபெற்ற சிலாங்கூர் தொழில் முனைவோர் எக்ஸ்போவின் முதல் பதிப்பு 149 கண்காட்சியாளர்கள் மற்றும் 5,000 பார்வையாளர்களின் பங்கேற்பை வெற்றிகரமாக ஈர்த்தது.
இந்த ஆண்டு, தொழில் முனைவோர் கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களில் 15,000 பார்வையாளர்களின் வருகையை பிகேஎன்எஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.








