ஷா ஆலம், செப் 26- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) நான்கு கிளைகளில் பொது மக்கள் 5 கிலோ அரிசியை 13.00
வெள்ளிக்கு வாங்கலாம்.
ஏஹ்சான் முத்திரை கொண்ட இந்த அரிசியை ஷா ஆலம் செக்சன் 14இல்
உள்ள விஸ்மா பி.கே.பி.எஸ்., செக்சன் 9, ஏஹ்சான் பி.கே.பி.எஸ்., மேரு,
ஜாலான் முவாஃபகாட் 1, தாமன் டத்தோ பண்டாரில் உள்ள ஏஹ்சான்
பி.கே.பி.எஸ். மற்றும் சிலாங்கூர் ஃப்ரூட் வேலியில் உள்ள ஏஹ்சான்
விற்பனைக் கூடத்தில் மேலே கூறப்பட்ட விலையில் வாங்க முடியும்
என்று அக்கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி 2,700 ஐந்து கிலோ அரிசி
பாக்கெட்டுகளை ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை
மையங்கள் உள்பட ஏழு இடங்களில் பி.கே.பி.எஸ். விற்பனை செய்து
வருகிறது.
உள்நாட்டு அரிசி விலையில் ஏற்பட்டுள்ள ஏற்றம் காரணமாக
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில
அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும்
ஒன்றாகும் என்று பி.கே.பி.எஸ். தலைமைச் செயல்முறை அதிகாரி
டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.
கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட்
10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும்
கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ சமையல்
எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும்
விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனையை அமல் செய்ய மாநில அரசு இதுவரை 4
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இதுவரை 2,850
இடங்களில் நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனை மூலம் சுமார் 50 லட்சம்
பேர் பயனடைந்துள்ளனர்.








