ஷா ஆலம், செப் 20.: அரசியல் தலைவர்கள் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் குறிப்பாக இனம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளில் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் மக்கள் நலன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுங்கை ஆயர் தவார் தொகுதி உறுப்பினர் வலியுறுத்தினார். இதன் மூலம், ஒற்றுமை பலப்படும் என்றார்.
"இதுபோன்ற பிரச்சனையில் விளையாடும் பொறுப்பற்ற அணுகுமுறை இனவாதத்தின் தீப்பிழம்புகளை எரியூட்டுகிறது மற்றும் மதத்தின் கொள்கைகள் மற்றும் மதிப்புகள் குறித்து மக்களிடையே தவறான புரிதலை உருவாக்குகிறது.
"இந்தப் பிரச்சனையை நிறுத்துங்கள். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகளோ வெளியிடும் எந்த ஒரு அறிக்கையின் தாக்கத்தை பற்றி எப்போதும் சிந்திக்க வேண்டும்" என்று டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.
சிலாங்கூரில் பல இன மக்கள் வசிப்பதால், இன அல்லது மத பிரச்சனைகளை எந்தக் கட்சியும் எழுப்பக் கூடாது என பண்டமாரான் பிரதிநிதி டோனி லியோங் டக் சீயும் கூறினார். இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால், மக்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படும் என்று அவர் கவலைப்படுகிறார்.
"மக்கள் பிரதிநிதிகள், குறிப்பாக நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர்கள், மக்களை ஒன்றிணைப்பதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்கள் சுய நலன்களை மட்டுமே சிந்திக்க வேண்டாம்," என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 12 அன்று, மக்களிடத்தில் ஆதரவைப் பெறவும் தனிப்பட்ட இலாபத்திற்க்காகவும் மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் தலைவர்களை மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கேட்டுக்கொண்டார்.
இந்த நாட்டில் உள்ள மக்களின் ஒற்றுமையைக் காக்கப் பொறுப்பற்ற முறையில் ஃபத்வா வழங்கும் செயல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








