ஷா ஆலம், செப் 20- அரச அமைப்பை அரசியல் களத்திற்குள் இழுக்க
வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்
தலைவர்களை பிரதமர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
அரச அமைப்பின் இறையாண்மைக்கும் அதன் உயரிய அந்தஸ்துக்கும்
அனைத்துத் தரப்பினரும் உரிய மரியாதை தருவது அவசியம் என்று
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆகவே, தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். (ஆட்சியாளர்களை
அரசியல் களத்தில் இழுக்க வேண்டாம்) (அவ்வாறு நிகழ்ந்தால்) அரச
ஆணை மற்றும் நிந்தனைச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சட்ட
விதிகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்
சொன்னார்.
சட்டத்தில் இடம் இருந்த போதிலும் பிரதமரை அல்லது அரசாங்கத்தை
தாக்குவோருக்கு எதிராக நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டேன்.
நிந்தனைச் சட்டத்தை திருத்துவதற்கு முன்பாக, நான் அச்சட்டத்தைப்
பயன்படுத்த மாட்டேன். ஆனால் ஆட்சியாளர்களின் அஸ்தஸ்தை
தொட்டால் ஆட்சியாளர்களின் முடிவைப் பொறுத்து உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். ஏனென்றால் நாம் ஆட்சியாளர்கள் விஷயத்திலும்
நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஆட்சியாளர்களால் நீதிமன்றத்தில் பதிலளிக்க முடியாது. ஊடகங்கள்
அல்லது பொது விவாதங்கள் விவாதங்கள் வாயிலாக தங்கள் கருத்துகளை
வெளியிட முடியாது என்று பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின்
மத்திய தவணைக்கான மதிப்பாய்வு மீதான விவாதத்தை முடித்து வைத்து
உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
அரசியலுடன் தொடர்பு படுத்தக்கூடாத அடித்தளத்தை ஆட்சியாளர்கள்
கொண்டிருப்பதாக தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்
சொன்னார்.
சிலாங்கூரில் நிகழ்ந்த சம்பவத்தைப் பொறுத்த வரை சிலாங்கூர் அரச
மன்றம்தான் புகார் செய்தது. நானோ அல்லது சட்டத் துறைத் தலைவரோ
அந்த புகாரைச் செய்யவில்லை. சிலாங்கூர் அரச மன்றமும் மேன்மை
தங்கிய சிலாங்கூர் சுல்தானும்தான் அவ்வாறு செய்ய உத்தரவிட்டனர்
என்று அவர் விளக்கினார்.








