ஷா ஆலம், செப் 20- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் இம்மாதம் 7
முதல் 17 வரை மேற்கொள்ளப்பட்ட ஏழு அதிரடிச் சோதனை
நடவடிக்கைகளில் இரு போதைப் பொருள் பதனீட்டுக் கும்பல்கள் மற்றும்
ஐந்து போதைப் பொருள் விநியோகக் கும்பல்களை போலீசார்
முறியடித்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையில் 1 கோடியே 28 லட்சம் வெள்ளி
மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்கள் பறிமுதல்
செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ
எஸ்.சசிகலா தேவி கூறினார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களில் 40,661 கிராம் ஹெரோயின் பேஸ்,
725 கிராம் ஹெரோயின், 365.62 கிராம் மெத் எண்ணெய், 25,444 கிராம் ஷாபு,
18,335 கஞ்சா, 4,270 கிராம் கொக்கேய்ன், 45,400 கிராம் கெத்தமின் ஆகிய
போதைப் பொருள்களும் அடங்கும் என அவர் சொன்னார்.
இச்சோதனை நடவடிக்கைகளில் 21 முதல் 42 வயது வரையிலான 14 பேர்
கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அவர்களில் இரு இலங்கைப்
பிரஜைகள் மற்றும் ஒரு தாய்லாந்து பிரஜையும் அடங்குவர் என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் செத்தியா
ஆலமில் உள்ள இரட்டை மாடி வீடு மற்றும் அதே தினம் இரவு 7.00
மணியளவில் பூச்சோங்கில் உள்ள தொழிற்சாலை ஆகிய இடங்களில்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரு போதைப் பொருள் பதனீட்டு
மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விரு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று
உள்நாட்டு ஆடவர்களும் இரு இலங்கைப் பிரஜைகளும் கைது
செய்யப்பட்டனர் என்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில்
நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
போதைப் பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு
உபகரணங்கள் மற்றும் இரசாயனங்களும் இந்நடவடிக்கையின் போது
பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருளுடன் சேர்த்து
கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 4.9 லட்சம் வெள்ளியாகும்
என்றார் அவர்.
இம்மாதம் 8 தொடங்கி 17 வரை பலாக்கோங், பூச்சோங் இண்டா,
பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு
கும்பல்களைச் சேர்ந்த ஐவர் பிடிபட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.








