ஷா ஆலம், செப்.19: தற்போது உள்ளுர் அரிசியின் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காண அதிகமாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையேற்றத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ரஹ்மா அரிசி விற்பனையை எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளது.
மக்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாகச் செயல்படுத்தும் இத்திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் ஃபுசியா சாலே விளக்கினார்.
"ரஹ்மா அரிசி விற்பனையைத் தொடங்குவதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூர் அரிசியின் விலையைச் சமாளிக்க அமைச்சகம் அதன் அதிகார வரம்பிற்குள் ஒரு வழியைக் கண்டறிய முயற்சிக்கிறது. மேலும், செயல்படுத்தும் முறையை நாங்கள் பொதுமைப்படுத்துவோம்,`` என்றார்.
"இது உண்மையில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உதவுவதாகும். இதனால் அவர்கள் மானிய விலையில் அரிசி வாங்க முடியும். இதன் வழி மக்களுக்கு உதவ முடியும்," என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டில் கூறினார்.
முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை 40 சதவீதம் அதிகரித்தாலும் உள்ளூர் அரிசியின் விலை உயராது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரஹ்மா விற்பனை, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது மற்றும் ஆகஸ்ட் மாதம் வரை 1,193 இடங்களில் செயல்படுத்தப்பட்டது.








