ஷா ஆலம், செப் 19- உயர்கல்வி பெறும் மாணவர்களின் கனவு இன
மற்றும் பொருளாதார பின்னணி காரணமாக சிதைந்து விடாமலிருப்பதை
அரசாங்கமும் கல்வித் துறை சார்ந்த தரப்பினரும் உறுதி செய்ய
வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்
ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் தகுதியை அவர்களின் கல்வித் திறனை அடிப்படையாகக்
கொண்டு மட்டுமே தீர்மானிக்க வேண்டுமே தவிர இனப் பின்னணி
அல்லது பொருளாதார நிலையைக் கொண்டு அல்ல என்றும் அவர்
கூறினார்.
கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய மாணவர்களுக்கு குறிப்பாக இந்திய
சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் விரும்பியத் துறைகளில்
உயர்கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவது
ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
எஸ்.பி.எம். அல்லது எஸ்.டி.பி.எம். தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற
இந்திய மாணவர்கள் அவர்கள் விரும்பியத் துறைகளில் குறிப்பாக
மருத்துவத்தில் உயர்கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவதில்
முட்டுக்கட்டையை எதிர்நோக்குகின்றனர்.
பொது உயர்கல்விக் கூடங்களில் தாங்கள் விரும்பிய துறையில்
அல்லாமல் வேறு துறைகளில் கல்வி வாய்ப்பு வழங்கப்படுவது
அவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைப்பதாக உள்ளது. மிகச்
சிறப்பான கல்வித் தகுதியைக் கொண்ட மற்றும் எதிர்காலத்தில் தங்கள்
குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மாற்றங்களைக் கொண்ட வரக்கூடிய
வாய்ப்புள்ள இந்திய மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
நீண்டகாலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு
காணப்படாமல் இருந்து வருகிறது. இத்தகைய திட்டமிட்டப்
புறக்கணிப்புகள் காரணமாக இளம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
மிக அதிகம். இதனால் கல்வி மட்டுமின்றி சமூகவியல் மற்றும்
பொருளாதார ரீதியாவும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன என
அவர் இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
நடப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இவ்விவகாரத்தில்
விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
குறைந்த பட்சம், தேர்வுகளில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு
செய்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காவது உரிய
வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி
வாய்ப்பு வழங்குவது என்பது ஒரு தற்காலிக நிவாரணம் அல்ல. மாறாக,
அவர்களுக்கு அறிவை வழங்குகிறோம். அவர்கள் தங்களையும் உயர்த்தி
தங்கள் குடும்பத்தினரை வறுமையிலிருந்து மீட்கவும் உதவுகின்றனர்
என்றார் அவர்.
சிறந்த மாணவர்கள் பிரகாசமான மலேசியாவின் உருவாக்கத்திற்கு
உத்தரவாதமாக விளங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனை
முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய
விவகாரமாக கருதி அரசாங்கமும் கல்வித் துறை சார்ந்த தரப்பினரும்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.








