ஷா ஆலம், செப் 18- இங்குள்ள புக்கிட்
கெமுனிங் சாலையில் கால்வாய் விரிவாக்கப்
பணி விரைவில் தொடங்கப்படும் என்று
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்
பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
புக்கிட் கெமுனிங் சாலையின் ஜாலான்
கெபுன் சுற்று வட்டம் தொடங்கி ஆறாவது
மைல் வரையிலானப் பகுதியில் சாலையின்
இருமருங்கிலும் கால்வாய்களை விரிவாக்கும்
பணிகள் ஏற்கனவே முற்றுப் பெற்ற நிலையில்
ஆறாவது மைல் தொடங்கி எட்டாவது மைல்
வரை அப்பணிகள் இன்னும்
பூர்த்தியடையாமல் உள்ளதாக அவர்
தெரிவித்தார்.
இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர் வீ.கணபதிராவ் முயற்சியில் இந்த
திட்டத்திற்கு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும்
கிடைத்து விட்ட நிலையில் கால்வாய்
நிர்மாணிப்புப் பணிகள் இன்னும்
தொடங்கப்படாதது தொடர்பில் விளக்கம்
பெறுவதற்காக சிலாங்கூர் மாநில வடிகால்
மற்றும் நீர்பாசனத் துறை அதிகாரிகளுடன்
தாம் அண்மையில் சந்திப்பு நடத்தியதாக
அவர் குறிப்பிட்டார்.
சாலையின் இரு மருங்கிலும்
பதிக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாய்கள்,
தெனாகா நேஷனல் மற்றும் டெலிகோம்
கேபிள்களை இடம் மாற்றுவதற்கு தங்களுக்கு
கால அவகாசம் தேவைப்படுவதாக
அதிகாரிகள் அச்சந்திப்பின் போது எங்களிடம்
தெரிவித்தனர்.
குழாய்கள் மற்றும் கேபிள்களை இடம்
மாற்றும் பணி முற்றுப் பெற்றவுடன் கால்வாய்
அமைக்கும் பணி தொடங்கும் என்றும் அதற்கு
முன்னதாக சாத்தியமான இடங்களில்
பணிகளைத் விரைந்து தொடங்குவதற்கான
முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்
அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர் என்றார்
அவர்.
இந்த கால்வாய் விரிவாக்கப் பணிகள் முற்றுப்
பெற்றவுடன் புக்கிட் கெமுனிங்
வட்டாரத்தில் நிலவிவரும் வெள்ளப்
பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும்
அவர் சொன்னார்.








