சுபாங் ஜெயா, செப் 15- அதி நவீன மின்சுடலைகளை நிர்மாணிக்கும்
ஊராட்சி மன்றங்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தரும்படி மாநகர் மன்ற
மேம்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிநவீன மின்சுடலைகளை அமைப்பதற்கு பல லட்சம் வெள்ளி வரை
தேவைப்படுவதால் மேம்பாட்டாளர்களுடனான இந்த ஒத்துழைப்பு
அவசியமாவதாக சுபாங் ஜெயா டத்தோ பண்டார் முகமது பவுஸி முகமது
யாத்திம் கூறினார்.
மாநில அரசின் கோரிக்கையின் படி ஒவ்வொரு ஊராட்சி மன்றமும்
குறைந்தது ஒரு மின்சுடலையை சொந்த செலவில் அல்லது தனியார்
துறையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்க வேண்டும் என அவர்
சொன்னார்.
இத்தகைய மின்சுடலைகளை அமைப்பதற்கு அதிகப் பட்சமாக அதாவது 30
லட்சம் வெள்ளி வரை தேவைப்படுகிறது. இந்த திட்டங்களை
நிறைவேற்றுவதில் ஊராட்சி மன்ற மேம்பாட்டாளர்கனின் ஒத்துழைப்பு
எங்களுக்குத் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.
இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் கம்போங் கோல சிலாங்கூர் பாருவில் சுபாங்
ஜெயா மாநகர் மன்றத்தின் மையத்துக் கொல்லையை திறந்து வைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வட்டார மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் மேலும் ஒரு
மின்சுடலையை நிர்மாணிக்க சுபாங் ஜெயா மாநகர் மன்றம்
திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது அதிநவீன மின்சுடலை சிப்பாங்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இங்கு இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய அதிநவீன தொழில்நுட்பம்
பயன்படுத்தப்படுகிறது. நல்லடக்க முறையை மேலும் சிறப்பான
முறையில் மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.








