ஷா ஆலம், செப் 13- அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில்
வாங்குதற்குரிய வாய்ப்பினை வழங்கும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனை இங்குள்ள தாமான் ஸ்ரீமூடாவில் மாதந்தோறும் நடத்தப்படும்
என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.
தாமான் ஸ்ரீ மூடா, எண்டோரா அடுக்குமாடி குடியிருப்பு மற்றும்
லெம்பாயோங் ஆகிய இடங்களை இலக்காக கொண்டு செப்டம்பர்
தொடங்கி டிசம்பர் வரையிலான இந்த நான்கு மாதங்களிலும் இந்த மலிவு
விற்பனை தொடர்ச்சியாக நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
தமது சொந்த முயற்சியில் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் இரண்டாவது
முறையாக இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய அவர்,
இந்த விற்பனைக்கு பொது மக்கள் வழங்கி வரும் ஆதரவு திட்டத்தை
தொடர்ந்து நடத்துவதற்குரிய உத்வேகத்தை தமக்கு வழங்கியுள்ளது
என்றார்.
இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா எண்டோரா அடுக்குமாடி
குடியிருப்பில் இன்று நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையில் 400க்கும்
மேற்படோர் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.
ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்களை குறிப்பாக குறைந்த வருமானம் பெறும்
தரப்பினரை இலக்காக கொண்டு இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டது.
இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தாலும் இந்தியர்கள்
குறைவாகவே இந்த திட்டத்தில் பங்கேற்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது
என அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசின் மானியத்தின் மூலம் சந்தையை விட குறைந்த விலையில்
இங்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. இங்கு
பொருள்களை வாங்குவதன் மூலம் குடும்பச் செலவுகளைக்
குறைப்பதற்குரிய வாய்ப்பினை இந்திய சமூகமும் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இன்றைய நிகழ்வில் 500 கோழிகள், 300 தட்டு முட்டை, 300 பாக்கெட்
அரிசி, இறைச்சி, சமையல் எண்ணெய், மீன் ஆகியவற்றோடு புதிதாக
மிளகாய் சோஸ் திராம், சாந்து, மீகூன், கோதுமை, கணவாய்
ஆகியவையும் புதிதாக விற்பனையில் சேர்க்கப்பட்டன என்றார் அவர்.








