ஷா ஆலம், செப் 13- சமயக் கட்டளைகளைப் பிறப்பிப்பதில் பொறுப்பற்ற
முறையில் நடந்து கொள்ளும் சில அரசியல்வாதிகளைக் கடுமையாகச்
சாடிய சிலாங்கூர் சுல்தான், இந்த போன்ற கட்டளைகளைப் பிறப்பிக்கும்
அதிகாரம் தகுதி வாய்ந்த தரப்பினருக்கு மட்டுமே உள்ளது என்பதையும்
நினைவுறுத்தினார்.
அரசியல் லாபத்திற்காக இஸ்லாத்தை திசை திருப்பும் நடவடிக்கையில்
ஈடுபடுவதை அனைத்துத் தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.
ஃபாத்வா எனும் சமயக் கட்டளைகள், சம்பந்தப்பட்ட ஆட்சியாளரின்
அனுமதி பெற்றப் பின்னரே மாநில ஃபாத்வா குழு அல்லது முஃப்தி
வெளியிட முடியும் என்று தேசிய இஸ்லாமிய சமய விவகார மன்றத்தின்
தலைவருமான அவர் சொன்னார்.
அதே சமயம், மாநில முஃப்திகளுடன் விவாதித்து மலாய் ஆட்சியாளர்
மன்றத்தின் ஒப்புதலைப் பெற்றப் பின்னர் சமய உத்தரவுகளைப்
பிறப்பிக்கும் அதிகாரம் தேசிய இஸ்லாமிய மன்றத்தின் முஸாகார
குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட முஃப்தியின் கருத்தின் அடிப்படையில் ஃபாத்வா
வெளியிடப்படாது. மாறாக சமய அறிஞர்கள் மற்றும் நிபுணர்களை
உள்ளடக்கிய முஸாகாரா குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில ஃபாத்வா
செயல்குழு உறுப்பினர்களின் ஒப்புதலும் இதற்கு தேவை என்று அவர்
கூறினார்.
வெளியிடப்படும் ஃபாத்வா மிகச் சரியானதாகவும் முஸ்லீம்கள் மற்றும்
அனைத்து மக்களின் நலனுக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்யும்
நோக்கில் இவ்வாறு செய்யப்படுகிறது என்றார் அவர்.
அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் ஃபாத்வா வெளியிட
முடியும் என்கிற பட்சத்தில் சமூகத்தில் பிரிவினையும் வன்முறையும்
உண்டாகி நாகரீக சமூகத்தை அழித்து விடும் என்றும் சுல்தான்
எச்சரித்தார்.








