ஷா ஆலம், செப் 12- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) வெளியீடான ஏஹ்சான் அரிசிக்கு அமோக வரவேற்பு
கிடைத்துள்ளது. இன்று இங்கு நடைபெற்ற கோத்தா அங்கிரிக் தொகுதி
நிலையிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில்
வாடிக்கையாளர்களின் தேர்வுக்குரிய பொருள்களில் அந்த அரிசியும்
ஒன்றாக இருந்தது.
தற்போது சந்தையில் அரிசி விலையேற்றம் கண்டுள்ளதோடு
பற்றாக்குறையையும் எதிர்நோக்கியுள்ளதால் இன்றைய நிகழ்வில்
விற்பனைக்கு வைக்கப்பட்ட அரிசி முழுவதும் ஒரு மணி நேரத்திற்குள்
விற்றுத் தீர்ந்தது என்று அக்கழகத்தின் விற்பனைப் பிரிவு மேலாளர்
முகமது ஃபாரிட் முஸ்தாபா கூறினார்.
வழக்கம் போல் இங்கும் 500 கோழிகள், 200 தட்டு முட்டைகள், 200 பேக்
அரிசி, 200 பேக் இறைச்சி, 200 பேக் மீன் ஆகியவற்றை விற்பனைக்கு
வைத்திருந்தோம்.
எனினும், மற்ற பொருள்களை விட அரிசிதான் முதலில் விற்றுத் தீர்ந்தது.
அரிசியை வாங்க இயலாதவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.
மக்களின் தேவையை நிறைவு செய்ய நாங்கள் முடிந்த அளவு முயற்சி
செய்கிறோம் என்றார் அவர்.
இங்குள்ள ஜாலான் பிளம்பும் 7/95, புளோக் 7, பூப்பந்து மைதானத்தில்
இன்று நடைபெற்ற ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையின் போது
செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, இந்த மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை தாம்
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் வாயிலாக தினமும் அறிந்து கொள்வதாக
குடும்ப மாதான நோராய்லி அப்தல் அஜிஸ் (வயது 59) கூறினார்.
நான் செக்சன் 18இல் வசிக்கிறேன். முன்பு கோழி வாங்க நான் விஸ்மா
பி.கே.பி.எஸ். செல்வேன். ஆனால் அங்கு இப்போது இந்த மலிவு
விற்பனை போல் குறைவான விலையில் கோழி கிடைப்பதில்லை. இங்கு
10 வெள்ளிக்கு ஒரு கோழியை வாங்க முடிகிறது என்றார் அவர்.








