பெட்டாலிங் ஜெயா, செப் 12- மலேசியாவின் முதல் சிறார் நட்புறவு
நகரமாக பெட்டாலிங் ஜெயாவை ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்
நிதியகம் (யுனிசெஃப்) தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த விருதைப் பெறும் நாட்டின் முதல் ஊராட்சி மன்றமாக பெட்டாலிங்
ஜெயா விளங்குவது அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்
என்று பெட்டாலிங் ஜெயா துணை டத்தோ பண்டார் அஸ்னான் ஹசான்
கூறினார்.
இந்த விருதை நாம் கடந்த வாரம் ஸ்பெய்ன் நாட்டில் பெற்றோம்.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக டத்தோ பண்டார் முகமது அஸ்ஹான்
முகமது அமிர் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார் என அவர் தெரிவித்தார்.
இந்த அங்கீகாரத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. கடந்த நான்கு
ஆண்டுகளாக இதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டு வந்தோம்.
ஆகவே இது உண்மையில் பெருமைபடக்கூடிய ஒரு அங்கீகாரமாகும்
என்றார் அவர்.
இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் சிவிக் சென்டரில்
நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டிற்கான 2023 புத்தக கண்காட்சியை
நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
கூறினார்.
சிறார்களுக்கு நட்புறவான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது
தவிர்த்து ஊராட்சி மன்ற நிலையில் சிறார் மன்றத்தை அமைப்பதற்கான
முயற்சிகளை முன்னெடுத்ததும் இந்த விருதை பெட்டாலிங் ஜெயா
பெறுவதற்கான காரணமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.
அடிப்படை வசதிகள் ரீதியாக இந்த மாநகரம் சிறார் நட்புறவு நகரமாக
விளங்குகிறது. இது தவிர ஆறு முதல் 17 வயது வரையிலான 24
உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறார் மன்றம் மாநகர் மன்றத்தின் முழு
அளவிலான கூட்டங்களிலும் பங்கேற்கிறது என்றார் அவர்.








