ஷா ஆலம், செப் 12 - சிலாங்கூர் ஒற்றுமைக்
கொள்கை விரைவில் வெளியிடப்படும். இந்த
ஆவணம் தற்போது மாநில கிராம மேம்பாடு
மற்றும் ஒற்றுமைக்கான ஆட்சிக் குழுவினால்
பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்திய கிராம மேம்பாடு
மற்றும் ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில்,
இந்தக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக
வெளியிடுவதற்கு முன்னர் முறையான
ஒப்புதலுக்காக தாங்கள் காத்திருப்பதாகச்
சொன்னார்.
நான் தற்போது சிலாங்கூர் ஒற்றுமைக்
கொள்கையின் சட்டத்தை ஆய்வு செய்து
வருகிறேன். அனைத்தும் ஏற்றுக்
கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதும்
நாங்கள் அதை பொதுமக்களுக்கு
அறிமுகப்படுத்துவோம் என்று
அவர் சிலாங்கூர் எஃப்.எம்
வானொலிக்கு அளித்தப் பேட்டியில்
குறிப்பிட்டார்.
இந்த ஆவணம் அடுத்தாண்டு இரண்டாம்
காலாண்டில் வெளியிடப்படும் என
எதிர்பார்க்கப்டுகிறது.
சிலாங்கூர் ஒற்றுமைக் கொள்கை கடந்த
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
கோவிட்-19 தொற்றுநோய் உச்சக்கட்டத்தில்
இருந்த போது அறிமுகப்படுத்தப்பட்டது.
இனவாரியான மக்கள்தொகை மற்றும்
மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்
வகையில் சீரமைக்கப்பட்ட கொள்கை,
தேசிய ஒற்றுமைக் கொள்கையை
அடிப்படையாகக் கொண்டுள்ளது .
சிலாங்கூர் அரசு நிர்வாகத்தில்
ஒற்றுமைக்கான பிரத்தியேகத் துறையை
அமைக்க வேண்டும் என்ற தேசிய ஒற்றுமைக்
கொள்கையின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த
நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர்
விளங்குகிறது.








