ஷா ஆலம், செப் 11- மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக
12வது மலேசியத் திட்டத்தில் செலவின உச்சவரம்பை அரசாங்கம் 1,500
கோடி வெள்ளி அதிகரிக்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
இதன் மூலம் அந்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு
40,000 கோடி வெள்ளியிலிருந்து 41,500 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்படும்
என்று 12வது மலேசியத் திட்டத்திற்கான மத்திய கால மறுஆய்வை
மக்களவையில் இன்று தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு தொடங்கி வரும் 2025 வரை ஆண்டுக்கு 9,000 கோடி வெள்ளி
வரை செலவிட அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. கடந்த 2021ஆம்
ஆண்டில் 6,430 கோடி வெள்ளியும் 2022ஆம் ஆண்டு 7,160 கோடி
வெள்ளியும் செலவிடப்பட்டன என அவர் தெரிவித்தார்.
இதன் வழி 12வது மலேசியத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 40,000
கோடி வெள்ளியை அரசாங்கம் செலவு செய்யும் அதேவேளையில்
செலவின உச்சவரம்பு 1,500 கோடி வெள்ளி அதிகரிக்கப்பட்ட்டு 41,500 கோடி
வெள்ளியாக உயர்த்தப்படும் என்றார் அவர்.
மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை அமலாக்குவது, நிர்வாகத் தரத்தை
உயர்த்துவது மற்றும் மானியங்களை மறுஆய்வு செய்வது ஆகிய
நோக்கங்களுக்காக இந்த நிதியின் அளவு உயர்த்தப்படுகிறது என அவர்
குறிப்பிட்டார்.
இந்த மத்திய கால மறுஆய்வின் போது, வறுமை ஒழிப்பு, அடிப்படை
வசதிகள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, மோசமான நிலையிலுள்ள
பள்ளிகள், கிளினிக்குகளை சீரமைப்பது, சுத்தமான குடிநீர் விநியோகத்தை
உறுதி செய்வது, இஸ்லாமிய பொருளாதாரத்தை உயர்த்துவது உள்ளிட்ட
அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்
அவர் சொன்னார்.








