ஷா ஆலம், செப் 11- கோஹிஜ்ரா கூட்டுறவுக் கழகத்தின் ஏற்பாட்டில்
காய்கறிகள் மலிவு விற்பனையில் விற்கப்படுகின்றன. இங்குள்ள செக்சன்
16, கோஹிஜ்ரா தொழில்முனைவோர் விற்பனை வளாகத்தில் நடைபெறும்
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தில் 120 விதமான காய்கறிகள் வெ.1.00
முதல் வெ.5.00 வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.
புதிதாக தருவிக்கப்பட்ட இந்த காய்கறிகளை மலிவான விலையில்
விற்கும் கோஹிஜ்ராவின் இந்த மக்கள் விற்பனைத் திட்டம் இன்று
தொடங்கி தினசரி அதிகாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
நடைபெறும் என்று கோர்ப்ராசி வர்கா ஹிஜ்ரா (கோஹிஜ்ரா) கூட்டுறவுக்
கழகத்தின் தலைமை நிர்வாகி முகமது ஷியுக்ரி இஸ்மாயில் கூறினார்.
இந்த காய்கறிகள் அனைத்தும் கோல லங்காட் மற்றும் ஷா ஆலம்,
ஜோஹான் செத்தியாவிலுள்ள 75 தோட்டங்கள் மற்றும் கோஹிஜ்ரா
தொழில் முனைவோரிடமிருந்து புதிதாக தருவிக்கப்படுவதாக அவர்
தெரிவித்தார்.
காய்கறி பயிரீட்டில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி
பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் உதவுவதற்கும் பொருள்
விலையேற்றத்தால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின்
சுமையைக் குறைப்பதற்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று
அவர் சொன்னார்.
இந்த விற்பனைத் திட்டத்தில் கோழி, மீன், முட்டை போன்ற
பொருள்களையும் சேர்ப்பதற்கு தாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர்,
இப்பொருள்கள் யாவும் சந்தையை விட மலிவான விலையில்
விற்கப்படும் என்றார்.
இந்த விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஷா ஆலம் செக்சன் 32
மற்றும் மோரிப் ஆகிய இடங்களில் உள்ளதைப் போல் இங்கும் சந்தை
உருவாக்கப்படும் என்றார் அவர்.








