ஷா ஆலம், செப் 11- ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தாஃபிஸ் பள்ளியைச்
சேர்ந்த 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் படுகொலை செய்ததாக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞர் மாமன்னரின் ஒப்புதல் கிடைக்கும்
வரை சிறையில் இருக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
வங்சா மாஜூ, கம்போங் டத்தோ கிராமாட், டாருள் குர்ஆன் இத்திபாக்கியா
தாஃபிஸ் மையத்தில் நிகழ்ந்த தீவிபத்து தொடர்பான இந்த விசாணையில்
நீதிபதி டத்தோ அபு பாக்கார் ஜாய்ஸ் தலைமையிலான நீதிபதிகள் குழு
இந்த முடிவை ஏகமனதாக அறிவித்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த போது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 16 வயதே
நிரம்பியிருந்ததால் 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர் என்ற அடிப்படையில்
அவர் மரண தண்னை விதிக்கும் சட்டத்தின் கீழ்
குற்றஞ்சாட்டப்படவில்லை.
தனியொருவரால் 28 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு கலத்தை
க்க முடியாது என்பதால் இந்த தீச்சம்பவத்தில் ஒருவருக்கும்
மேற்பட்டவருக்கு தொடர்பிருக்கும் சாத்தியம் உள்ளதாக அரசுத் தரப்புத்
வழக்கறிஞர் ஹோவ் மே லிங் கடந்த மே 11ஆம் தேதி நடைபெற்ற
விசாரணையின் போது வாதிட்டார்.
அந்த எரிவாயு கலங்களில் ஒன்று நேராகவும் மற்றொன்று பக்கவாட்டிலும்
வைக்கப்பட்டு அந்த தாஃபிஸ் மையத்தின் வாசலில் பெட்ரோல்
ஊற்றப்பட்டு தீயிடப்பட்டது என அவர் சொன்னார்.
அந்த தாஃபிஸ் மையத்தில் தங்கியிருந்தவர்களை படுகொலை செய்த
குற்றத்திற்காக தற்போது 22 வயதான அவ்வாடவர் மாமன்னரின் ஒப்புதல்
கிடைக்கும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நிகழ்ந்த இந்த
தீச்சம்பவத்தில் அந்த மையத்தில் இருந்த 21 மாணவர்களும் இரு
ஆசிரியர்களும் கருகி மாண்டனர்.








