ஷா ஆலம், செப் 8- நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் வரையிலான காலக் கட்டத்தில் அந்த எண்ணிக்கை 3.4 விழுக்காடு குறைந்து 579,200 பேராக பதிவாகியுள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறை கூறியது.
நாட்டில் ஆள்பலச் சந்தை மிதமான அளவில் வளர்ச்சி கண்டு வருவதாகக் கூறிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மாஹிடின், மாதத்திற்கு மாதம் என்ற அடிப்படையில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 0.2 விழுக்காடு அதிகரித்து 1 கோடியே 63 லட்சத்து 40 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது என்றார்.
ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் மனித வளச் சந்தை 0.1 விழுக்காடு உயர்வு கண்டு 1 கோடியே 69 லட்சத்து 10 ஆயிரம் பேராக உள்ளது. இதன் வழி நாட்டில் மொத்த மனித வளச் சந்தை 70.1 விழுக்காடாக ஏற்றம் கண்டுள்ளது என்றார் அவர்.
மலேசியாவின் நிலையான மனிதவளத்தில் ஆள்பல பயன்பாட்டைப் பொறுத்த வரை நாட்டில் வேலை செய்வோரில் 75.4 விழுக்காட்டை தொழிலாளர் பிரிவு ஈடு செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அந்தப் பிரிவு மாதத்திற்கு மாதம் என்ற அடிப்படையில் 0.1 விழுக்காடு அதிகரித்து 1 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் பேராக ஆகியுள்ளது. சுயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 0.4 விழுக்காடு உயர்வு கண்டு 29 லட்சத்து 60 பேராக ஆகியுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.
பொருளாதாரத் துறையைப் பொறுத்தமட்டில், சேவைத் துறையில் குறிப்பாக உணவு, பானங்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை மற்றும் கல்வி ஆகியவற்றில் வேலை செய்வோரின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கட்டுமானம், சுரங்கம் மற்றும் குவாரி சார்ந்த துறைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக இருந்து வரும் வேளையில் உற்பத்தி மற்றும் விவசாயத் துறையில் பின்னடவை எதிர்நோக்கியள்ளன என்றார்.








