கிள்ளான், செப் 5- இன்று இங்கு நடைபெற்ற செமெந்தா தொகுதி
நிலையிலான ஏசான் ரஹ்மா மலிவு விற்பனைக்கு பொது மக்கள்
மத்தியில் மகத்தான ஆதரவு கிடைத்தது.
ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் அனைத்து அத்தியாவசியப்
பொருள்களும் விற்றுத் தீர்ந்தது இந்த விற்பனைக்கு கிடைத்த
வரவேற்புக்கு சான்றாக விளங்குகிறது.
இதே இடத்தில் ஏற்கனவே மூன்று முறை மலிவு விற்பனை நடத்தப்பட்ட
போதிலும் இன்றைய விற்பனையில் பெரும் எண்ணிக்கையிலானோர்
அதாவது 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தொகுதி
ஒருங்கிணைப்பாளர் முகமது நாஸிப் ஜூல்கிப்ளி கூறினார்.
வழக்கமாக இந்த விற்பனையை காலை 10.00 மணிக்குதான்
தொடங்குவோம். எனினும் காலை 9.00 மணி முதல் பெரும்
எண்ணிக்கையிலானோர் குறிப்பாக மூத்த குடிமக்கள் வரிசையில்
காத்திருந்ததால் விற்பனையை அரை மணி நேரம் முன்னதாகவே
ஆரம்பித்து விட்டோம் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள புக்கிட் காப்பார், அரியானா சதுக்கத்தில் நடைபெற்ற மலிவு
விற்பனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலிவான விலையில் தரமான பொருள்களை வாங்குவதற்காக இது
போன்ற மலிவு விற்பனைகள் எப்போது நடைபெறும் என்று தாம்
எதிர்பார்ப்புடன் எப்போதும் காத்திருப்பதாக இல்லத்தரசியான சித்தி
ஜூபைடா ரஹ்மான் (வயது 25) கூறினார்.
நான் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் பேஸ்புக்
பக்கத்தை விடாது பார்ப்பது வழக்கம். இதன் மூலம் மலிவு விற்பனை
எங்கு நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கு 50
வெள்ளியில் அரிசி, கோழி, முட்டை ஆகிய பொருள்களை வாங்க
முடிகிறது என்றார் அவர்.
இதனிடையே, மேலும் அதிகமானோர் பயன் பெறுவதற்கு ஏதுவாக
அதிகமான பொருள்களை விற்பனையில் சேர்க்கும்படி அய்ரிஸால்
மஸ்டார் (வயது 61) கூறினார்.
நான் பத்துக்கும் மேற்பட்ட தடவை இத்தகைய மலிவு விற்பனைகளில்
கலந்து கொண்டுள்ளேன். ஆனால் இம்முறை 9.30 மணிக்கு வந்த போது
அனைத்துப் பொருள்களும் விற்றுத் தீர்ந்தது கண்டு ஏமாற்றமடைந்தேன்
என்று அவர் சொன்னார்.








