ஷா ஆலம், ஆக 29- பத்தாங் பெர்ஜூந்தை, மின்யாக் தோட்டத்தில்
வீற்றிருக்கும் ஸ்ரீ புவன மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா
கடந்த ஞாயிற்றுக் கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக புதிதாகப் பதவியேற்றிருக்கும் வீ. பாப்பாராய்டு சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார். அவருக்கு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பூரண மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு, இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவுக்குத் தம்மை அழைத்து சிறப்பு செய்தமைக்காக ஆலய நிர்வாகத்தினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
இந்த ஆலயத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக மானியம் கோரி நிர்வாகத்தினர் செய்த விண்ணப்பம் கடந்த தவணையின் போது அங்கீரிக்கப்பட்டதாகவும் அத்தொகை விரைவில் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் நில பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக தாம் விரைவில் அனைத்து ஆலய நிர்வாகத்தினருடனும் சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
இந்த நிகழ்வில் இந்திய சமூகத் தலைவர்களான பத்மநாபன், செல்வராஜ்
உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.








