ஷா ஆலம், ஆக 28- புலியின் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும்
ஜாலான் பத்தாங் காலி-கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையின் 18வது கிலோ
மீட்டரில் கேமரா பொறியை பொருத்தும் நடவடிக்கையில் வன விலங்கு
பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹலித்தான்) ஈடுபட்டுள்ளது.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தாம் வேலைக்குச் சென்று
கொண்டிருந்த போது அந்த வன விலங்கைத் கண்டதாக போலீஸ்
பந்துவான் உறுப்பினர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில
பெர்ஹிலித்தான் இயக்குநர் டேனிஸ் டென் சூன் யுங் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் கோதொங் ஜெயா போலீஸ்
நிலையத்திடமிருந்து நேற்று காலை 8.14 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாக அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து எங்கள் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு
விரைந்து சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் மரங்களும்
புதர்களும் அடர்ந்து காணப்பட்டதால் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய
முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அந்த வரிப்புலியை அடையாளம் காணும் முயற்சியில் உலு
சிலாங்கூர் மாவட்ட வன இலகாவுக்கு தாங்கள் ஒத்துழைப்பு நல்கி
வருவதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
அகமது பைசால் தாஹ்ரிம் கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வோர் மிகுந்த
கவனத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த புலியின் நடமாட்டத்தைக் கண்டால் அது குறித்து உடனடியாக உலு
சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 03-60641222 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் ஆலோசனை கூறினார்.








