ஷா ஆலம், ஆக 25- டியூஷன் ராக்யாட் சிலாங்கூர் (பி.டி.ஆர்.எஸ்.)
எனப்படும் இலவசப் பிரத்தியேக வகுப்புத் திட்டம் கடந்த 2010ஆம்
ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள
65,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த திட்ட அமலாக்கத்திற்காக கடந்தாண்டு 70 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்பட்ட வேளையில் இந்த வகுப்பில் கலந்து கொள்ளும்
மாணவர்களுக்கு மதிய உணவும் இலவசமாக வழங்கப்பட்டதாக மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட
போது 60 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் 6,500 மாணவர்களுக்கு
இலவச பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்பட்டன என்று அவர் சொன்னார்.
தற்போது ஏறக்குறைய அதே அளவிலான நிதி ஒதுக்கீட்டில் 65,000
மாணவர்கள் கூடுதல் வகுப்புகளில் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பு
கிட்டியுள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்தாண்டு காலத்தில் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களைச் சேர்ந்த 200,000 மாணவர்கள் இந்த இலவச வகுப்புகளின்
மூலம் பயன் பெறுவர் என மந்திரி பெசார் முன்னதாக கூறியிருந்தார்.
ஒற்றுமை அரசின் “கித்தா சிலாங்கூர் வாக்குறுதிகள்- 5 ஆண்டுகளில் 5
முன்னெடுப்புகள்“ என்ற தேர்தல் கொள்கைறிக்கையில் இந்த இலவச
டியூஷன் திட்டம் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கும்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக ஒரு கோடி
வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி
பெசார் கழகம் நேற்று முன்தினம் கூறியிருந்தது.
அத்திட்டங்களில் பி.டி.ஆர்.எஸ். மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டம்
மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது
ஆகியவையும் அடங்கும் என அது குறிப்பிட்டிருந்தது.








