ஷா ஆலம், ஆக 25- அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில்
வழங்கும் ஜூவாலான் ஏசான் ரஹ்மா திட்டத்திற்கு அதிகளவிலான அரசு
சார்பு நிறுவனங்களும் (ஜி.எல்.சி.) தனியார் நிறுவனங்களும் உதவும் என்று
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.)
எதிர்பார்க்கிறது.
இந்த விற்பனைத் திட்டம் தொடர்ச்சியாகவும் விரிவான அளவிலும்
மேற்கொள்ளப்படுவதற்கு அதிக நிதி தேவைப்படுவதாக பி.கே.பி.எஸ்.
சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி ரோஸ்னானி அப்துல் மாலிக் கூறினார்.
இருக்கும் நிதியைக் கொண்டு இந்த திட்டத்தை தொடர முடியும். அதிக
இடங்களுக்கு விற்பனையை விரிவாக்கம் செய்வதாக இருந்தால் நமக்கு
கூடுதல் நிதி தேவைப்படும். மாநில அரசு மானியம் வழங்கும்
காரணத்தால் இத்திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் பொருள்களை
விற்க முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, மேலும் அதிகமான அரசு சார்பு நிறுவனங்களும் தனியார்
நிறுவனங்களின் தங்களின் நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில்
மாநில அரசுடன் இணைந்து இத்திட்டத்திற்கு பங்களிக்கலாம் என அவர்
தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ பெக்கானில் நடைபெற்ற மலிவு
விற்பனையின் போது சிலாங்கூர் கினியிடம் அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே இந்த ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை குறித்து
கருத்துரைத்த ரோஸ்னானி அனைத்து விற்பனைகளிலும் பொருள்களின்
அளவும் எண்ணிக்கையும் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு வருகிறது
என்றார்.
வழக்கம் போல் கோழி, இறைச்சி, அரிசி, முட்டை, மீன், சமையல்
எண்ணெய் ஆகிய பொருள்களை அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு
வைக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இவை தவிர இந்த விற்பனையில் காய்கறிகள் மற்றும் இதர வகை
பொருள்களையும் சேர்ப்பதற்கு நாங்கள் முயன்று வருகிறோம் என அவர்
கூறினார்.








