ஷா ஆலம், ஆக 25- கடந்த 1970ஆம்
ஆண்டுகளில் கிழக்கு-மேற்கு
நெடுஞ்சாலையை (கிரீக்-ஜெலி)
நிர்மாணிக்கும் போது கம்யூனிஸ்டு
பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த
87 பேரின் குடும்பங்களுக்கு தலா 1,000
வெள்ளி ஆறுதல் தொகையாக
வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த
பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்)
தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அந்த
தொகையை வழங்குவது அவர்களின்
சேவையைப் போற்றுவதற்கான
அடையாளமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
கம்யூனிஸ்டு பயங்கரவாதத்
தாக்குதல்களாலும் கட்டுமானப் பணிகளின்
போது ஏற்பட்ட விபத்துகளாலும் பல
உயிர்கள் பலியாகியிருப்பதாக எனக்குத்
தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட
அத்தகைய துயரச் சம்பவங்கள் நிச்சயமாக
நாட்டின் வரலாற்றில் கசப்பான
அத்தியாயமாகவும் இறந்தவர்களின்
வாரிசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய
சம்பவங்களாகவும் அமைந்துள்ளன என்று
அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக, கிரீக் அருகே நேற்று நடைபெற்ற
மைஜலான் பிரச்சாரம் மற்றும் செத்தியா பக்தி
ஜாலான் ராயா தீமோர் பாராட் தொடக்க
விழாவில் அன்வார் கலந்து கொண்டார்.








