ஷா ஆலம், ஆக 24- ஸ்ரீ கெம்பாங்கானில் 60 லட்சம் வெள்ளி செலவில் புதிய காலை
சந்தை நிர்மாணிப்புத் திட்டம் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகர்களின் ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த
சந்தை வடிவமைக்கப்படுவதாக ஸ்ரீ கெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி கூறினார்.
இது மிகப் பெரிய திட்டமாகும். இந்த தவணையில் நான் அதிகம் முன்னுரிமை
அளிக்கும் திட்டமாகவும் இது விளங்குகிறது. சந்தையின் வடிவமைப்பு
குறித்து கூட்டாக முடிவு செய்யப்பட்ட பிறகு இதன் கட்டுமானம் தொடங்கும் என அவர்
குறிப்பிட்டார்.
மாநில அரசு நிர்ணயித்தபடி இந்த சந்தையின் கட்டுமானச் செலவு சுமார் 60 லட்சம்
வெள்ளியாக இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பைப் பொறுத்து கூடுதலாகவும்
இருக்கும் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த சந்தையில் ஒரே நேரத்தில் 400 வர்த்தகர்கள்
வியாபாரம் செய்ய முடியும். இந்த திட்டம் பூர்த்தியடைய
இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். இடைப்பட்ட காலத்தில் வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக மாற்று
இடங்களும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றுப் அவர் குறிப்பிட்டார்..
தற்காலிக இடங்களில் வியாபாரம் செய்வோருக்கு புதிய சந்தையில் வர்த்தகம்
செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறிய அவர், கட்டுமானம்
திட்டமிட்டபடி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கபடுகிறது என்றார்.








