ஷா ஆலம், ஆக 24- அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்த வருமானம் பெறும்
பி40 தரப்பினருக்காக 200,000 கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிக்க
மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாநிலத்தில் சமநிலையான மேம்பாட்டை உறுதி செய்வதற்காக இந்த
திட்டங்கள் யாவும் புறநகர்ப் பகுதிகளை மையமாகக் கொண்டு
மேற்கொள்ளப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா கூறினார்.
மேலும் அதிகமான சிலாங்கூர் மக்கள் தரமான கட்டுபடி விலை
வீடுகளுக்கு உரிமையாளர்களாக இருப்பதை உறுதி செய்வது
இத்தவணைக்கான தங்களின் திட்டங்களில் ஒன்றாகும் என்று அவர்
சொன்னார்.
ஆகவே, இந்த ஐந்தாண்டு தவணையின் போது 200,000 வீடுகளை
நிர்மாணிக்கவுள்ளோம். திட்டமிடப்பட்ட மற்றும் புதிதாக கட்டுமானத்தில்
உள்ள வீடுகளும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு அதிகமான வீடுகளை
நிர்மாணிக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள
வேண்டுகோளுக்கிணங்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என
அவர் தெரிவித்தார்.
இதன் கட்டுமான நடைமுறை மற்றும் பணி செயலாக்கம் தொடர்பில்
வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்துடன் விரைவில் பேச்சு
நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான ஐந்தாண்டு
தவணையின் போது பக்கத்தான் ஹராப்பான் அரசு 171,000 கட்டுபடி விலை
வீடுகளை நிர்மாணித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி இம்மாத தொடக்கத்தில் கூறியிருந்தார்.
அதிகளவிலான மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும் மாநிலமாக
சிலாங்கூர் விளங்குவதை ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறை அமைச்சு
ஒப்புக் கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








