கிள்ளான், ஆக 24- கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் 4 கோடி வெள்ளி
செலவில் புதிய விளையாட்டுத் தொகுதி உருவாக்கப்படவுள்ளது.
“காம்ப்ளெக்ஸ் சுக்கான் கிளாங் உத்தாரா“ என்ற இந்த விளையாட்டுத்
தொகுதி கிள்ளான் நகரின் புதிய அடையாளச் சின்னமாக விளங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விளையாட்டுத் தொகுதி கிள்ளான் வட்டார மக்களுக்கு நீண்ட கால
அடிப்படையில் பயன்தரக் கூடிய உயர்மதிப்புக் கூட்டுத் திட்டமாக
விளங்கும் என்று கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி
ரோஸ்லான் கூறினார்.
இந்த உத்தேச விளையாட்டுத் தொகுதி பண்டமாரான் விளையாட்டுத்
தொகுதி மற்றும் கிள்ளான் விளையாட்டரங்கின் தோற்றத்தைக்
கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.
நான்கு கோடி வெள்ளி மதிப்பிலான இந்த திட்டம் கட்டங் கட்டமாக
மேற்கொள்ளப்படும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த தொகுதி
முழுமையாகப் பூர்த்தியாகும் என அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான், எக்ஸ்பிலனேட் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற 2024 எம்.பி.கே. வரவு செலவுத் திட்டத் தயாரிப்பு மீது பொது
மக்களின் கருத்தைக் கேட்டறியும் நிகழ்வின் போது முன்வைக்கப்பட்ட
பரிந்துரைகளில் இந்த விளையாட்டுத் தொகுதித் திட்டமும் ஒன்றாகும் என
அவர் தெரிவித்தார்.
தஞ்சோங் ஹராப்பானில் உள்ள புகிஸ் கப்பலை பழுதுபார்ப்பதற்கும்
பராமரிப்தற்கும் நகராண்மைக் கழகம் 30 லட்சம் வெள்ளியைச்
செலவிடவுள்ளதாகவும் நோராய்னி குறிப்பிட்டார்.
தஞ்சோங் ஹராப்பானின் அடையாளச் சின்னமாக இந்த புகிஸ் கப்பல்
விளங்கிறது. அந்த பகுதியின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஈர்ப்பு மையமாக விளங்கும் அந்த கப்பலை எம்.பி.கே. தொடர்ந்து பராமரித்து வரும் என்றும்
அவர் சொன்னார்.








