ஷா ஆலம், ஆகஸ்ட் 16: கடந்த மே மாதம் முதல் இன்ஃப்ராசெல் நிறுவனத்தால் மாநிலம் முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மெகா சாலை மேம்பாட்டு திட்டத்தை மூன்று மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் தொடர்ந்து செயல்படுத்தி வரும்..
ஜாலான் கிரோஸ் பான் 1, சபாக் பெர்ணம் மற்றும் ஜாலான் குபுர் 1, கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ளப் பட்டதாக மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜாலான் குபுர் லிண்தாங், கம்போங் தெங்கா, (சபாக் பெர்ணம்) ஆகிய இடங்களிலும் ஆகஸ்ட் 3 அன்று பி13 ஜாலான் அயர் ஹிதம் மற்றும் ஜாலான் முர்னி (சிப்பாங்) ஆகிய இடங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
ட்விட்டரில் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் சாலை மேம்பாட்டு பணியை இன்ஃப்ராசெல் மேற்கொண்டுள்ளது.
"சாலை சேதம் குறித்து #infrasel #namajalan #daerah என்ற அடையாளத்துடன் தொடர்ந்து புகார் அளிக்கவும். " என்று ட்விட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பழுதடைந்த நிலையிலுள்ள 94.9 கிலோ மீட்டர் நீள சாலைகளை சீரமைக்கும் பணி கடந்த மே தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறியிருந்தார்.
ஊராட்சி மன்றங்கள், பொதுப்பணித் துறை, வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் அதிகாரத்திற்குட்பட்ட 118 சாலைகள் இத்திட்டத்தின் கீழ் செப்பனிட படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.








