பெட்டாலிங் ஜெயா, ஆக 7- அத்தியாவசியப் பொருள்களை மலிவான
விலையில் விற்கும் நோக்கில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்
தொடங்கப்பட்ட மலிவு விற்பனை அடுத்தாண்டு இறுதிவரை தொடரும்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
தற்போது உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின்
ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டு வரும் இந்த ஜூலாவான் ரஹ்மா ஏசான்
எனும் விற்பனைத் திட்டத்தை தொடர்வதற்கு மாநில அரசின் வலுவான
நிதி நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
முன்பு முட்டைக்கான பற்றாக்குறை நிலவிய போது, அந்த உணவுப்
பொருள் சந்தையில் இருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில்
மக்களுக்கு லோரி மூலம் குறைந்த விலையில் முட்டையைக் கொண்டுச்
சேர்ப்பேன் என நான் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தேன்.
சிலாங்கூர் மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் விற்பனைக்கு
வைக்கப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து தற்போது 16ஆக
உயர்ந்து விட்டது என்று அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு தாமான் மேடான் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்
கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும்
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ
அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜூலை மாதம் வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 2,400
மலிவு விற்பனைகளில் 6 கோடி வெள்ளி மதிப்பிலான பொருள்கள்
விற்கப்பட்டுள்ளன. இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு சுமார் 2 கோடி வெள்ளியை உதவித் தொகையாக இதுவரை வழங்கியுள்ளது.








