ஷா ஆலம், ஆக 7- சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் நேஷனலின் தேர்தல்
வாக்குறுதிகளை கடுமையாக விமர்சனம் செய்த சுபாங் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், அந்த வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதில் அந்த கூட்டணிக்கு உள்ள ஆற்றல் குறித்து
கேள்வியெழுப்பினார்.
அந்த தேர்தல் கொள்கையறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான
சலுகைகளை நிறைவேற்றுவதற்கு மாநிலத்தின் வருமானத்திற்கும்
அதிகமான நிதி தேவைப்படும். இந்த அடிப்படை விஷயத்திற்கு தீர்வு
காண்பதற்கான வழிகளை டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான
கூட்டணி தெளிவுபடுத்தத் தவறிவிட்டது என அவர் தெரிவித்தார்.
வழக்கமாக, நிதிப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மாநில அரசுகள்
மத்திய அரசைத்தான் நம்பியிருக்கும் என்பதால் இந்த விவகாரத்திற்கு
தீர்வு காண்பது அவசியமாகும் என அவர் சொன்னார்
தேர்தல் கொள்கையறிக்கையை வரையும் போது நீங்கள் நிதி
தாக்கத்தையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். பெரிக்கத்தான்
நேஷனலின் கொள்கையறிக்கை ஒட்டுமொத்த உத்தேச செலவினத்தையும்
உள்ளடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசிடமிருந்து 50 கோடி வெள்ளி அல்லது 100 கோடி வெள்ளி
தேவைப்படுகிறதா என்பதை அவர்கள் விவரிக்கவில்லை என்றும் அவர்
சொன்னார்.
தங்களுக்கு தேவையான மாதிரி தேர்தல் கொள்கையறிக்கையைத்
தயாரிப்பது பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் விருப்பத்தைப்
பொறுத்ததாக இருந்தாலும் பதவிக்கு வந்தால் மாநில அரசின்
கருவூலத்தை நிர்வகிப்பதற்கான திட்டங்களை தெளிவுபடுத்துவது அதன்
கடமையாகும் என்றார் அவர்.
நிதிப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் நிதியளிக்கும்படி மத்திய அரசை
உங்களால் அணுக முடியுமா முடியுமா என மக்கள் உங்களைப்
கேட்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் ஒத்துழைக்காமல் அவர்களை சதா தாக்கிக்
கொண்டிருந்தால் அவர்கள் உதவுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க
முடியும்? என்றார் அவர்.








