ஷா ஆலம், ஆக 6- பாரிசான் நேஷனலுடன் (தேசிய முன்னணி) குறிப்பாக
அம்னோவுடன் பக்கத்தான் ஹராப்பான் ஏற்படுத்தியுள்ள கூட்டணி,
ஹராப்பானுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமானா
கட்சியின் தொடர்பு இயக்குநர் காலிட் சமாட் கூறுகிறார்.
அம்னோவின் விரிவான வலையமைப்பு மற்றும் உட்புற தொகுதிகளில்
அதன் ஊடுருவலை ஹராப்பான் கூட்டணி முழுமையாகப் பயன்படுத்திக்
கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.
மலாய்க்காரர்களை பெரும்பான்மையாக உள்ள உட்புறப் பகுதிகளில் தீவிர
ஆதரவாளர்களைக் கொண்டுள்ள காரணத்தால் அப்பகுதிகளை பாஸ்
கட்சியும் அம்னோவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இதன்
காரணமாக இப்பகுதிகளில் நுழைவதில் சமூகவியல் ரீதியான தடைகளை
ஹராப்பான் எதிர்நோக்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விரு கூட்டணிகளுக்கிடையிலான தற்போதையக் கூட்டணி தேசிய
முன்னணிக்கும் அம்னோவுக்கும்கூட சாதகமாக அமையும்.
நகர்ப்புறங்களில் ஹராப்பான் கொண்டுள்ள வலுவான வலையமைப்பை
அக்கட்சி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றார்
அவர்.
ஒற்றுமை அரசின் வழி பாரிசான் நேஷனல் பக்கத்தான் ஹராப்பானுடன்
இணைந்து வேலை செய்வது பாதகத்திலும் சாதகமாகவே அமைந்துள்ளது.
இதன் மூலம் நாம் உட்புறப் பகுதிகளில் அதிக கிளைகளைக் கொண்ட
அம்னோவின் வலையமைப்பை அணுக முடியும்.
புதிய சூழலில் மக்களை நாம் சந்திப்பதற்குரிய வாய்ப்பு இதன் மூலம்
கிட்டும். நம்மைப் பற்றி அவர்களும் அவர்களைப் பற்றி நாமும் நன்கு
அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். இதன் வழி மலாய் ஆதிக்கம் நிறைந்த உட்புற பகுதிகளில் விளைவுகளை நம்மால் ஏற்படுத்த இயலும் என்று காலிட் கூறினார்.
அதோபோல் அம்னோவும் நகர்புற மற்றும் மலாய்காரர் அல்லாத
வாக்காளர்களை அணுகவும் அவர்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு
கிட்டும் என்றார் அவர்.
இதனை மகத்தான வாய்ப்புகள் கொண்ட நட்புறவாக நான் பார்க்கிறேன்.
இந்த வலுவான கூட்டணி இன்னும் பல தேர்தல்களுக்கும் நீடிக்கும்
என்றும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.








