ஷா ஆலம், ஆக 4- இம் மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தலில் இந்திய சமூகம் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முழு ஆதரவை வழங்கி சிலாங்கூரில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை இடங்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
சிலாங்கூர் அரசு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு வலுவுடன் இருப்பதை உறுதி செய்ய இந்த பெரும்பான்மை அவசியம் என்று கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்த தேர்தலில் சிலாங்கூர் அரசு 3 அல்லது 5 தொகுதிகள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றால் அது நிலை தன்மையற்ற அரசாக தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்படும் என்பதோடு இதனால் அரசு நிர்வாகத்தில் குழப்பம் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்திற்கு இந்திய சமூகத்தின் ஆதரவைப் புலப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 தொகுதிகள் உள்ளன. அவற்றில் 35 தொகுதிகளில் இந்தியர்களின் வாக்கு 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது. ஆகவே, மாநிலத்தில் வெற்றியை உறுதி செய்யும் துருப்புச் சீட்டாக இந்தியர்கள் விளங்குவதை இது உணர்த்துகிறது.
இந்த தேர்தலில் வரலாற்றுப் பூர்வ வெற்றியை நாம் உறுதி செய்வது அவசியம். இந்த வெற்றியின் மூலமே இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று தொடங்கி தேர்தல் தினம் வரை கடுமையாகப் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதோடு இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








