ஷா ஆலம், ஆக 4- சிலாங்கூர் கெர்பாங் மெரிடைம் (எஸ்.எம்.ஜி.) திட்டம் உட்பட
தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அவதூறு பரப்பிய தரப்பினருக்கு எதிராக லண்டாசான்
லுமாயான் நிறுவனம் ( எல்.எல்.எஸ்.பி.) சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொடர்ச்சியாக விளக்கங்கள் வழங்கப்பட்ட பின்னரும் சில தரப்பினர் வேண்டுமென்றே
தவறான தகவல்களைத் திரும்பத் திரும்பப் பரப்பி வருவதால் தங்கள் நற்பெயரையும்
கெளரவத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அந்நிறுவனம் கூறியது.
எங்கள் நிறுவனத்தைப் பற்றி தீங்கிழைக்கும் கருத்துக்களை வெளியிடும் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம்.
எங்கள் நிறுவனத்திற்கு எதிராக அவதூறு, தவறானத் தகவல்கள், தரவுகள் மற்றும்
கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வரும் பல தனிநபர்களை நாங்கள்
கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம் அது தெரிவித்தது.
எஸ்.எம்.ஜி. திட்டம் தொடர்பாக அவதூறு பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்று மாநில அரசின் துணை நிறுவனமான லண்டாசான் லுமாயான் கடந்த
திங்கட்கிழமை அறிவித்தது.
ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்ட விஷயம் குறித்து முகநூல் மற்றும் யூடியூப் காணொளி
மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் அவதூறானத் தகவல்களை ஒளிபரப்புகிறார்கள் என்பது தெளிவாகிறது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.








