கோலசிலாங்கூர், ஆக 4- தமது பிரிவு போட்டியிடும் அனைத்து ஆறு
தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என கெஅடிலான் கட்சியின்
மகளிர் பிரிவு நம்பிக்கை கொண்டுள்ளது.
அதிகரித்து வரும் மக்களின் ஆதரவு மற்றும் ஒற்றுமை கூட்டணி தேர்தல்
இயந்திரத்தின் சிறப்பான முன்னேற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்
இந்த நம்பிக்கையைத் தாம் வெளிப்படுத்துவதாக கெஅடிலான் கட்சியின்
தேசிய மகளிர் பிரிவுத் தலைவிர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.
மகளிர் பிரிவின் அனைத்து தொகுதிகளிலும் மகத்தான வெற்றி
பெறுவோம். நமக்கு கிடைத்து வரும் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பதற்கான
அறிகுறிகள் தென்படுவதோடு மக்களின் ஆதரவும் பிரமிப்பூட்டும்
வகையிலும் உள்ளது என அவர் சொன்னார்.
தேர்தல் இயந்திரத்தின் முன்னேற்பாடுகளும் மிகவும் சிறப்பானதாக
உள்ளன. ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி
செய்வதற்காக ஒற்றுமை கூட்டணியினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு
வருகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
போட்டி கடுமையானதாக இருந்தாலும் நாம் களம் கண்டுள்ள அனைத்துத்
தொகுதிகளிலும் நிறைவான வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கை
உள்ளது என்று இங்குள் தாமான் புக்கிட் ஈஜோக்கில் நடைபெற்ற தேர்தல்
பிரசாரத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்காகச்
சம்பந்தப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் முழு தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சருமான அவர் சொன்னார்.
தேர்தல் எதிர்கொள்வது நமக்கு புதிய அனுபவமல்ல. ஆகவே, எந்த
பிரச்சனையும் எழவில்லை. அனைத்துப் பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதோடு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு முழு விளக்கத்தையும் அளித்து விட்டோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.








