பந்திங், ஆக 1- ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினராக நீண்ட காலம்
பணியாற்றியதன் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு பந்திங்
தொகுதி மக்களுக்கு நிறைவான சேவையை வழங்கப் பாடுபடுவேன் என்று
அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான வீ.பாப்பாராய்டு
கூறினார்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மாநகர் மன்ற உறுப்பினராக
பணியாற்றியதன் மூலம் கிடைத்த பரந்த அனுபவம் சமூக நலன் மற்றும்
அடிப்படை வசதிகள் துறையில் சிறப்பான சேவையை வழங்குவதற்கு
தமக்கு வாய்ப்பினை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் நீண்ட காலம் அதாவது 13 ஆண்டுகள் மாநகர் மன்ற
உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். இந்த அனுபவம் சாலை சீரமைப்பு,
தொகுதியில் சுத்தத்தைப் பராமரிப்பது, சமூக நலன் உள்ளிட்ட
விஷயங்களில் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எனக்கு பெரிதும் துணை புரியும்
என்று அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பந்திங்
தொகுதியில் ஜசெக சார்பில் பாப்பாராய்டு களமிறங்கியுள்ளார். இத்தொகுதி
பக்கத்தான் ஹராப்பான் வசம் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய அவர்
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சந்தைகள், வணிக மையங்கள், உணவகங்கள் போன்ற மக்கள் அதிகம்
கூடும் இடங்களுக்கு நேரில் சென்று பொது மக்களைச் சந்தித்து
அவர்களின் ஆதரவைத் திரட்டும் அணுமுகுறையை அவர்
கடைபிடிக்கிறார்.
பந்திங் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான்
மற்றும் ஹராப்பான். பாரிசான் நேஷனல் கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் பாப்பாராய்டுவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.








