கிள்ளான், ஜூலை 26- கிள்ளானை நகராண்மைக் கழக அந்தஸ்திலிருந்து
மாநகர அந்தஸ்துக்கு தரம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்
அளித்துள்ளதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங்
கூறினார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதன் தொடர்பான
முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், இதன் வழி சுபாங் ஜெயா, ஷா
ஆலம், பெட்டாலிங் ஜெயா ஆகியவற்றுக்கு அடுத்து நான்காவது மாநகராக
கிள்ளான் உருவாகும் என்றார்.
கிள்ளான் நகரம் கடந்த 1890 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தப் பின்னர்
133 ஆண்டுகளுக்குப் பின்னர் அது மாநகர் அந்தஸ்தைப் பெறுகிறது.
பாரம்பரியத்தையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்ட உயர்தர
சேவை மற்றும் அடிப்படை வசதிகளைத் தரும் ஆற்றலை இந்நகரம்
கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் 20வது மாநகராக கிள்ளான் நகராண்மைக் கழகம்
உயர்த்தப்படுவதானது திறன்மிக்க, தரமான மற்றும் அனைத்துலக
நிலையிலான சேவையை வழங்கக்கூடிய நிதி ஆற்றலை இந்நகரம்
கொண்டுள்ளதை புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று அவர்
சொன்னார்.
இங்குள்ள எம்.பி.கே. கட்டிடத்தில் செந்தோஹா காசே எனும் நிகழ்வுக்குத்
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா
அல்ஹாஜ்ஜிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் கிள்ளானை மாநகராக
பிரகனப்படுத்தும் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.








