ஷா ஆலம், ஜூலை 26- சிலாங்கூர் மாநில அரசின் கடந்த ஐந்தாண்டு கால நிர்வாகத்தில் மாநிலத்தின் நிதி கையிருப்பும் சமூக நல உதவிகளும் அதிகரித்துள்ளதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் வரலாற்றில் முதன் முறையாக மிக அதிகமாக அதாவது 25.5 விழுக்காட்டு பங்களிப்பை மாநிலம் வழங்கியுள்ளது. இந்த தவணையில் மாநிலத்தின் பொருளாதாரம் ஏறுமுகமாக இருந்ததை இது காட்டுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்தாண்டு மாநிலத்தின் பங்களிப்பு 2.5 விழுக்காடாகவும் 2021 இல் 24.8 விழுக்காடாகவும் 2020இல் 24.3 விழுக்காடாகவும் 2019இல் 24.2 விழுக்காடாகவும் 2018 இல் 23.7 விழுக்காடாகவும் இருந்தது.
கடந்த 2022 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 0.7 விழுக்காடு அதிகரித்து 24.8 விழுக்காட்டிலிருந்து 25.5 விழுக்காடாக ஆனது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம் என்றார் அவர்.
மாநிலத்தின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்காமல் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருவதாகக் கூறிய அவர், தனது தலைமைத்துவத்தில் மாநிலம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் தாம் நிராகரிப்பதாகவும் சொன்னார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் 47 கோடி வெள்ளியாக இருந்த மாநிலத்தின் நிதி கையிருப்பும் தற்போது 340 கோடி வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்மின் அலி நிர்வாகத்தைக் காட்டிலும் நடப்பு அரசாங்கம் சமூக நலத் திட்டங்களுக்கு கூடுதலாக 100 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளது. அஸ்மின் காலத்தில் 130 கோடி வெள்ளி மட்டுமே சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட்ட வேளையில் தற்போது நாம் 230 கோடி வெள்ளியை செலவிட்டுள்ளோம் என்றார் அவர்.








