ஷா ஆலம், ஜூலை 24- குறைந்த வருமானம் பெறக்கூடிய தரப்பினரின்
பொருளாதாரச் சுமையைக் குறைப்பதில் மாநில அரசின் ஏசான் ரஹ்மா
மலிவு விற்பனை பெரிதும் துணை புரிவதாக ஷா ஆலம் வட்டார
இந்தியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இத்தகைய விற்பனைகளை இந்தியர்கள் குறிப்பாக குறைந்த வருமானம்
பெறுவோர் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள்
கேட்டுக் கொண்டனர்.
நேற்று இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா மைடின் பேராங்காடி
அருகே நடைபெற்ற ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையின் போது அவர்கள்
இந்த விற்பனை குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மாநில அரசின் இந்த மலிவு விற்பனை குறித்த தகவலை அறிந்து
அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் நோக்கில் தாம் இங்கு வந்ததாக
ஷா ஆலம் செக்சன் 18ஐ சேர்ந்த திருமதி வி. சரஸ் (வயது 60) கூறினார்.
இந்த விற்பனையில் பொருள்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன.
செலவை மிச்சப்படுத்துவதற்காக வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பது
பெரிய சுமையாகத் தெரியவில்லை என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்தில் பங்கு கொள்வதன் மூலம் இந்திய சமூகத்தில் உள்ள
குறைந்த வருமானம் பெறும் தரப்பினரும் பயன் பெற முடியும் என்று
அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த மலிவு விற்பனை குறித்து கருத்துரைத்த தாமான் ஸ்ரீ
மூடாவைச் சேர்ந்த திருமதி மணிமேகலை ராமன் (வயது 60) மாநில
அரசின் இந்த திட்டம் தங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு
பெரிதும் பயனளிக்கிறது என்றார்.
இந்த விற்பனையில் கோழி, முட்டை, மீன் போன்ற சமையல்
பொருள்களை குறைந்த விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு எங்களுக்கு
கிட்டியது. இந்த திட்டத்தை அமல்படுத்தி வரும் மாநில அரசுக்கு நாங்கள்
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற மலிவு விற்பனைகள் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்
குறிப்பாக இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிக்கடி நடத்தப்பட
வேண்டும் என திருமதி எஸ். ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டார்.
குறைவான விலையில் பொருள்கள் விற்கப்படும் காரணத்தால் வீட்டுக்குத்
தேவையான அத்தியாவசியப் பொருள்களை குறைவான விலையில்
அதிகமாக வாங்க முடிகிறது. மக்கள் மீது மாநில அரசு கொண்டுள்ள
பரிவை இந்த திட்டம் புலப்படுத்துகிறது என்றார் அவர்.
இந்த விற்பனை காலை 10.00 மணிக்கு தொடங்கிய வேளையில் பொது
மக்கள் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்.
இந்த விற்பனை நிகழ்வை கோத்தா கெமுனிங் தொகுதியின் நடப்பு
உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ்
தொடக்கி வைத்தார்.
ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான வீ.பாப்பா ராய்டு மற்றும்
ராமு நடராஜன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.








