கோம்பாக், ஜூலை 24- சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான ஹராப்பான் கிண்ண கபடி விளையாட்டுப் போட்டியில் பூச்சோங் பிரதர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை
வென்றது.
இப்போட்டியில் பங்கேற்ற இதர ஏழு அணிகளை தோற்கடித்து 500 வெள்ளி ரொக்கம் மற்றும் பதக்கத்தை அக்குழு பெற்றது.
கம்போங் பாண்டன் மற்றும் பி.எல். அகாடமி அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்று 300 வெள்ளி மற்றும் 200 வெள்ளியுடன்
பதக்கத்தைப் பெற்றன.
கபடி விளையாட்டில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதன் மூலம்
இவ்விளையாட்டின் தரத்தை உயர்த்த முடியும் என்று போட்டியின்
ஏற்பாட்டாளரான கே.எம். புவேந்திரன் கூறினார்.
இந்த கபடி விளையாட்டு அதில் ஈடுபடுவோருக்கு ஒழுக்கம் மற்றும்
குழுவாக இணைந்து எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து மறைமுகமாக கற்பிக்கிறது.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகமான விளையாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு
செய்யப்படும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் சுறுசுறுப்பு
ஏற்படவும் குற்றச் செயல்களில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைக் தவிர்க்கவும்
இயலும் என்று என்று அவர் கூறினார்.
இங்குள்ள பத்து கேவ்ஸ், டேவான் ராக்யாட் பொது மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில்
வெற்றியாளர்களுக்கான பரிசுகளை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி எடுத்து வழங்கினார்.
அதே நிகழ்வில் சுங்கை துவா தொகுதி நடப்பு சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் மந்திரி புசார் பவுண்ட் ஃபிட்னஸ் மகளிர் ஆரோக்கியத் திட்டத்தைத் தொடக்கியும் வைத்தார்.








