SELANGOR

சிலாங்கூரில் உள்ள 63 ஆலயங்களுக்கு 810,000 வெள்ளி மானியம் - கணபதி ராவ் வழங்கினார்

23 ஜூன் 2023, 9:39 AM
சிலாங்கூரில் உள்ள  63 ஆலயங்களுக்கு 810,000 வெள்ளி மானியம் - கணபதி ராவ் வழங்கினார்

ஷா ஆலம், ஜூன் 23- சிலாங்கூரில் உள்ள  63 இந்து ஆலயங்களுக்கு  810,000 ( எட்டு லட்சத்து பத்தாயிரம்) வெள்ளி இன்று மானியமாக வழங்கப்பட்டது.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் ஆலயப் பொறுப்பாளர்களிடம் இந்த நிதியை வழங்கினார்.

இவ்வாண்டிற்கான மூன்றாம் கட்ட  நிதியளிப்பாக இந்த நிகழ்வு விளங்குகிறது. இவ்வாண்டு தைப்பூசத்தின் போது பத்துமலைத்  திருத்தலத்தில் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற  நிகழ்வில் முதல் கட்டமாக 45 ஆலயங்களுக்கு 650,000 வெள்ளி மானியம் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ஷா ஆலம் ஸ்ரீமூடாவில் நடைபெற்ற மாநில நிலையிலான பொங்கல் விழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் 15 ஆலயங்களுக்கு 255,000 வெள்ளியைப் பகிர்ந்தளித்தார்.

இந்த நிதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான  வீ. கணபதிராவ்,  மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு இவ்வாண்டில்  மொத்தம் 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்ட வேளையில் அதில் 23 லட்சம் வெள்ளி இந்து ஆலயங்களுக்கு வழங்கப் பட்டதாகச் சொன்னார்.

பக்கத்தான் கூட்டணி கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றிய பின்னர் முஸ்லிம் அல்லாத சமயங்களுக்கு லீமாஸ் எனப்படும் செயல் குழுவை அமைத்து அதன் வாயிலாக மானியம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தியது என்று அவர் சொன்னார்.

அதன் படி இந்து ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆலயங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது மற்றும் சமய நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்த மானியம் வழங்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஆலயங்களுக்கு மானியம் 18 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது. இவ்வாண்டு முதல் ஆலயங்களுக்கு மானியம் 23 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.