ஷா ஆலம், ஜூன் 15: இந்த வார இறுதியில் ஷா ஆலம் மாநகராட்சி கன்வென்ஷன் சென்டரில் (MBSA) நடைபெறும் சிலாங்கூர் மெகா கேரியர் கார்னிவல் 2023 யை முன்னிட்டு மொத்தம் 10,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதில் பல்வேறு துறைகளில் உள்ள 120 முதலாளிகள் இணைந்து கொள்ள உள்ளனர். அதனால், வேலை தேடுபவர்களையிம், தற்போதுள்ள பணியில் திருப்தி கொள்ளாதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்தார்.
"எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மெகா சிலாங்கூர் கேரியர் கார்னிவல் 10,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இதில் வேலை தேடும் சிலாங்கூர் குடிமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்," என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலில் நடத்தப்பட்ட இந்த கார்னிவல், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்பின் மூலம் மொத்தம் 1,996 நபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது.
இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ள நபர்கள் www.selangorjobportal.com.my என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.








