கிள்ளான், ஜூன் 14- வசதி குறைந்த தரப்பினர் தங்கள் வர்த்தகத்தை
விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக மாநில அரசு அமல்படுத்தி வரும்
பல்வேறு திட்டங்கள் பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா, புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்பு பெருந்திட்டம் போன்றவை சிறு தொழில் முனைவோரின் வர்த்தக விரிவாக்கத்திற்குப் பெரிதும் துணை புரிவதாக இத்திட்ட பங்கேற்பாளர்கள் கூறினர்.
ஐ-சீட் திட்டத்தின் மூலம் தமக்கு கிடைத்த சுமார் 9,000 வெள்ளி மதிப்புள்ள
வர்த்தக உபகரண உதவி தனது கட்டுமான மற்றும் புனரமைப்பு தொழிலை
மேலும் விரிவுபடுத்துவதற்குப் பெரிதும் உதவும் என்று கிள்ளான், ஜாலான்
தெப்பி சுங்கை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் லட்சுமணன் (வயது 37) கூறினார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த தாம் கோவிட்-19
பெருந்தொற்று காலத்தில் வேலையை இழந்ததால் சொந்த தொழிலில்
ஈடுபட ஆரம்பித்ததாக அவர் சொன்னார்.
நண்பர் மூலம் ஐ-சீட் திட்டம் பற்றி அறிந்து அதற்கு விண்ணப்பம்
செய்தேன். ஆறு மாதக் காலத்தில் எனது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு
9,000 வெள்ளி மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டன. பல
மாதங்களுக்குச் சேமித்தால் மட்டுமே நான் பொருள்களை நான் சொந்தமாக
வாங்க முடியும்.
இந்த உதவியை வழங்கிய மாநில அரசுக்கு ஐ-சீட் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர். ஐ-சீட் திட்டத்தின் மூலம் தாம் சுமார் 5,000 வெள்ளி மதிப்புள்ள பிரிண்டர், பெக்ஸ் உள்ளிட்ட சாதனங்களைப் பெற்றதாகத் தாமான் கிள்ளான் ஜெயாவை சேர்ந்த சந்திரிகா ராமசாமி கூறினார்.
கிள்ளான் தாமான் டேசாவானில் சாலை வரி, வாகனமோட்டும்
லைசென்ஸ் புதுப்பிக்கும் சேவையை கடந்த ஈராண்டுகளாக நான் வழங்கி
வருகிறேன். எனது பணிக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட
இந்த உபகரணங்களுக்காக நான்கு மாதங்களுக்கு முன்னர் நான்
விண்ணப்பம் செய்தேன் என்று அவர் சொன்னார்.
இந்த உதவியை வழங்கிய மாநில அரசு மற்றும் ஐ-சீட்
நிர்வாகத்தினருக்குத் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர்,
இதன் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்குவதற்குரிய வாய்ப்பு
கிட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனிடையே காப்பாரில் முக ஒப்பனை மற்றும் சிகையலங்கரிப்பு
நிலையத்தை நடத்தி வரும் திருமதி உமா இராமலிங்கம் (வயது 48) ஐ-சீட்
திட்டத்தின் கீழ் சுமார் 3,000 வெள்ளி மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப்
பெற்றுள்ளார்.
மேரு சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் வாயிலாகத் தாம் செய்த
விண்ணப்பத்தை ஏற்று சலுன் நாற்காலி, ஸ்டீம் பெட் உள்ளிட்ட
பொருள்களை ஐ-சீட் தமக்கு வழங்கியது என்றார் அவர்.
தமது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு இந்த உபகரணங்கள்
பெரிதும் துணை புரிவதாகக் கூறிய அவர், வர்த்தகத்தை விரிவுப்படுத்த
விரும்பும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மாநில அரசின் இந்த
உதவியை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.








