கிள்ளான், ஜூன் 14- சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ள
புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்பு பெருந்திட்டத்தின் மூலம் கடந்த
2016ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 3,256 பேருக்கு 1
கோடியே 35 லட்சத்து 98 ஆயிரத்து 420 வெள்ளி மதிப்புள்ள வர்த்தக
உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வசதி குறைந்த தரப்பினரை பொருளாதார ரீதியில் உயர்த்துவதை
நோக்கமாகக் கொண்டு மாநில அரசு அமல் செய்துள்ள அதிக நீதி
ஒதுக்கீட்டிலான திட்டம் இதுவாகும் என்று சமூகவியல் துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
இவ்வாண்டில் இதுவரை மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த
334 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேளையில்
அவர்களில் கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேருக்கு 355,910 வெள்ளி
மதிப்புள்ள வர்த்தக உபகரணங்கள் வழங்கப்பட்டன என்று அவர்
சொன்னார்.
இன்று கிள்ளான் மாவட்ட நில மற்றும் மாவட்ட
அலுவலகத்தில் புளுரிண்ட் வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஐ-சீட்
எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர்
மேம்பாட்டு இலாகா விண்ணப்பதாரர்களுக்கு வர்த்தக உபகரணங்கள்
வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில அரசின் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில்
இடம் பெற்றுள்ள திட்டங்களில் ஒன்றாக இந்த புளுபிரிண்ட் வறுமை
ஒழிப்பு பெருந்திட்டம் விளங்குகிறது.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வர்த்தக உபகரணங்களை
வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உதவும் நோக்கில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மாநில அரசு இந்த
திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.








