கிள்ளான், ஜூன் 14: கிள்ளான் ஆற்றின் அருகே உருவாக்கப்பட்ட 70 ஏக்கர் சதுப்புநிலப் பூங்கா விரைவில் பொது மக்களுக்காகத் திறக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவித்தார்.
கார்பன் உறிஞ்சியாக செயல்படும் சதுப்பு நிலக் காடுகளைச் சமூகம் பார்வையிடுவதற்காக கூடிய விரைவில் பொதுமக்களுக்கு திறக்கவுள்ளதாக கெர்பாங் மெரிடைம் சிலாங்கூர் (SMG) நிறுவனம் தெரிவித்துள்ளதாக நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார்.
"சாதாரண காடுகளை விட சிறந்த கார்பன் உறிஞ்சும் சதுப்புநில காடுகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த முயற்சியாகும்.
“சிலாங்கூரில் இது போன்ற இன்னும் சில இடங்களை சுற்றுச்சூழல் சுற்றுலா தளமாக மேம்படுத்த உள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.
RM10 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பூங்காவில் மீன்பிடி நடவடிக்கைகள் தவிர வழிப்பாட்டு அறை, கழிப்பறை, முகாம் மற்றும் ஓய்வு இடம் ஆகியவை உள்ளன என உள்கட்டமைப்பு எஸ்கோ ஈர் இஷாம் அசிம் தெரிவித்தார்.
100 ஆண்டுகளுக்கும் மேலான சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட இந்த இடம், முழுமையாகத் திறக்கப்படும் போது உள்ளூர் மற்றும் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் தகவல் மையத்தில் பூங்காவைப் பற்றி அறிந்து கொள்ளலாம் , ஆனால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் அழகைக் காண 1.6 கிலோமீட்டர் தூரம் நடந்து உள்ளே செல்ல வேண்டும்.








