ஷா ஆலம், ஏப் 3- வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு பொதுமக்களுக்கு
குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடிமட்ட மக்களின் பிரச்சனைகளை உணர்ந்த மாநில அரசு
அண்மைய சில ஆண்டுகளாக மலிவு விற்பனைத் திட்டத்தை அமல்படுத்தி
வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி கித்தா சிலாங்கூர் 2.0
முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அக்ரோ பெரிஹாத்தின் என்னும் வேளாண்
பரிவுத் திட்டத்தை மாநில அரசு முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அதிக அளவிலான
காய்கறிகள் சந்தையில் குவியும் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில்
இந்த திட்டத்தை மாநில அரசு தொடக்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஏசான் ராக்யாட் எனும் விற்பனைத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயப் பொருள்களைச்
சந்தைப்படுத்துவதற்கும் பொது மக்கள் நியாயமான விலையில
பொருள்களை வாங்குவதை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்த திட்டம்
அமல்படுத்தப்பட்டது.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்
நடைபெறும் இந்த விற்பனை குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினரை இலக்காகக் கொண்டு மாநிலத்தின் 56 தொகுதிகளிலும்
நடத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தவிர்த்து வாரத்தின் இதர நாட்களில் தினசரி ஒன்பது
இடங்களில் இந்த விற்பனை நடத்தப்படுகிறது. மாநிலச் சட்டமன்ற
உறுப்பினர்கள் இந்த விற்பனை தொடர்பான தகவல்களைப் பொது
மக்களிடம் சேர்ப்பதில் பெரிதும் உதவி புரிகின்றனர்.








