ஷா ஆலம், மார்ச் 2- கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தி விரிவாக்கும் பணிக்குச் சிலாங்கூர் அரசின் நிதி ஒதுக்கீடு எதுவும் சம்பந்தப்படவில்லை என்று அத்திட்டத்தை மேற்கொண்டு வரும் லண்டசான் லுமாயான் சென். பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாறாக, கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்திட்ட அமலாக்கத்திற்கான 70 கோடி வெள்ளி நிதி 11 கோடியே 70 லட்சம் வெள்ளி செலவில் மேம்படுத்தப்படவிருக்கும் நிலத்திற்கான பிரீமியத் தொகையை ஈடு செய்யும் வகையில் அமையும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷியாபுல் அஸ்மின் கூறினார்.
மேலும் 5 கோடியே 40 லட்சம் வெள்ளி கடனளிப்பு வாயிலாகவும் எஞ்சியத் தொகை எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் கடன் மூலமாகவும் பெறப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை, பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் மற்றும் ஆலோசக நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வில் 56 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிள்ளான் ஆற்றை அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் துப்புரவு செய்ய 70 கோடி வெள்ளி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. புக்கிட் லஞ்சோங் முதல் தாமான் ஸ்ரீ மூடா வரை அங்கிருந்து ஆற்று முகத்துவாரம் வரையிலுமான பகுதியை இத்திட்டத்தை மேற்கொள்ள 24 கோடியே 90 லட்சம் வெள்ளி செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








